முக்கூடற் பள்ளு

** முக்கூடற் பள்ளு
**காப்பு
** கொச்சகக் கலிப்பா

#0
பூ மேவும் நீல வெற்பில் பொன் நிறமும் உண்டு என
பூ மா மேவும் முக்கூடல் மால் அழகர் பள் இசைக்கே
பா மேவு சொல் புரப்பார் பாவலர் என்று எட்டெழுத்து
நா மேவு பத்தர் பத்து நாவலரும் காப்பாமே
** கடவுள் வணக்கம்
** திருமால்
** சிந்து

#1
மணி மரகதச் சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர்
மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர்
அணி அரவணைத் தூயவர் மாயவர் அடியர் மனப் பூரணர் காரணர்
அழகர் பள் இசைப் பா வளம் நா வளம் ஆகத் தருவோர்
துணிவொடு திருத்தாள் வலி தோள் வலி துணை என முதல் கூறிய தேறிய
சுரர் பதி பகைக்கு ஈறு உள வீறு உள சூரத்துடனே
பணிவிடைசெயத் தானவர் வானவர் பழ மகபதிப் பேரியல் சீரியல்
பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே
** கருடாழ்வார்

#2
தாரத்து இருபேரில் கலவித் தாகத்தினளாகத் தருமச்
சாலைப் புவி காலைத் தடவத் தலையணை கொடுத்தே
ஆரத்தன பாரத் திரு உற்று ஆசைப்பட ஓசைத் திரை நெட்டு
ஆழிக்கு இசை ஊழிச் சயனத்து அழகர் பள் இசைக்கே
சேரத் தளை பூரித்து அசையைச் சீரைப் பகர்வாரைக் கருதித்
தேடித் திசை ஓடித் திரியத் திறமிலை அதற்கே
கோரச் சிறை வீரப் புய முக்கூடல் பதி ஆடல் கருடக்
கோனைப் பெரியோனைப் பரவக் குறைவிலை நமக்கே
** சேனை முதலிகள்

#3
பூவலயக் காவலன் எனவும் பூவை நிறச் சேவையன் எனவும்
போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர்
பாவலனுக்கு ஆவலன் எனவும் பார் அறியத் தாரணைசெயும் என்
பாடலில் முக்கூடலின் அழகர் பள்ளேசலிலே
தா அறு சொல் கேவலமுறினும் சார்வு பொருள் சோர்வுகள் வரினும்
தாள விதத்தோடு அணி கெடினும் தள்ளார் புலவோர்
தேவர் முடிப் பூ அடி பிரசம் சீல மணிக் கோல் அணி இலகும்
சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே
** நம்மாழ்வார்

#4
வித்தாரக் கமலையை விமலையை மெய்க் கோவில் புரம் மிசை உரம் மிசை
மிக்காகப் பரிபவர் தெரிபவர் வேத சிற்பரத்தார்
முத்தேவில் பெரியவர் கரியவர் முப்பான்மைத் தொழிலினர் எழிலினர்
முக்கூடல் குழகர் மெய் அழகர் பள் மூவகைத் தமிழ்க்கே
பத்தாகப் பெயர்தரும் உயர்தரும் பத்தாளில் பருதியர் சுருதியர்
பட்டோலைக்கு எழுதரு முழுது உணர் பா வகுத்து உரைத்தோர்
நத்து ஓலக் குருகையில் வருகையில் நட்பாகப் புளி நடு வெளிபடு
நல் போதத்து அருள் பொழி திருவிழி ஞான வித்து எனக்கே
** நூல்
** பள்ளியர் வரவு
** கொச்சகக் கலிப்பா

#5
காவலராம் தேவரை முன் கைதொழுது பின்னரும் என்
ஆவலினாலே அழகர் ஆசூர் வளநாடும்
சீவல நல் நாடும் இசை தேர்ந்து உரைக்கப் பண்ணை-தனில்
ஏவலுறும் பள்ளியர் வந்து எய்தியது சொல்வேனே
** முக்கூடல்பள்ளி
** சிந்து
** இராகம் : பந்துவராளி. தாளம் : அடதாளம்

#6
நெற்றியில் இடும் மஞ்சணைப் பொட்டும் மற்றொரு திருநாமப் பொட்டும்
நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும்
பற்றிய கரும்பொன் காப்பும் கையில் வெற்றிலையும் வாயில் ஒதுக்கிய
பாக்கும் ஒரு சுருளுக்கு ஒருக்கால் நீக்கும் இதழும்
வெற்றி விழிக்கு எதிர்கொண்டு இரு கோடு உற்ற கருப்பு இன்னும் எதிர்ந்தால்
விரிந்திடும் என்று எண்ணிச் சற்றே சரிந்த தனமும்
சிற்றிடையும் செம்பொன் இடைக்கிடை பெற்றிடும் பட்டாங்கும் இலங்கத்
திருமுக்கூடல் வாய்த்த பள்ளி தோன்றினாளே
** கொச்சகக் கலிப்பா

#7
உள்ளத்தில் ஊசலிடும் உல்லாசப் பார்வை விழிக்
கள்ளத்தினால் இரும்பும் கல்லும் கரையாதோ
வெள்ளத்திலே துயில் கார் மெய் அழகர் முக்கூடல்
பள்ளத்தியார் அழகு பார்க்கமுடியாதே
** மருதூர்ப் பள்ளி
** சிந்து
** இராகம் : பயிரவி : தாளம் : ரூபகம்.

#8
செம் சரணப் படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்கச்
சிறிய நுதல் பிறை வெண் நீற்றுக் குறி ஒளிவீசப்
பஞ்சலைமீன் கெண்டைகள் எனவே அஞ்சனம் தோய் கண்கள் இரண்டும்
பக்கக் கொண்டையினும் குழையினும் தைக்கக் குதிக்க
நெஞ்சு கவர் கன தன மா மதக் குஞ்சர இணைக் கோடுகள் அசைய
நீல வடக் கல்லுடன் கோவைத் தாலியும் இலங்க
வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க
மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே
** கொச்சகக் கலிப்பா

#9
ஆதி மருதீசருக்கும் ஆட்பட்டு அழகருக்கும்
பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள்
சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட
போதில் ஒரு பூவில் ஐந்து பூவும் பயிர் ஆமே
** பள்ளன் வரவு
** சிந்து
** இராகம் : சுருட்டி. தாளம் : ஆதி.

#10
கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ரக்
கத்தரிகையிட்ட வண்ணக் கன்னப் பரிசும்
குறுக்கில் வழுதடி சேர்த்திருக்கும் கச்சையும் செம்பொன்
கோலப் புள்ளி உருமாலும் நீலக் கொண்டையும்
சறுக்கும்-தொறும் குதிப்பும் சுறுக்கும் தலையசைப்பும்
தடி சுற்றி ஏப்பமிட்டே அடிவைப்பதும்
மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற
வடிவழகக் குடும்பன் வந்து தோன்றினானே
** பள்ளன் தன் பெருமை கூறுதல்

#11
ஒரு போது அழகர் தாளைக் கருதார் மனத்தை வன்பால்
உழப் பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன்
சுருதி எண்ணெழுத்து உண்மைப் பெரியநம்பியைக் கேளாத்
துட்டர் செவி புற்று எனவே கொட்டால் வெட்டுவேன்
பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம்
பேய்க் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன்
திருவாய்மொழி கல்லாரை இரு கால் மாடுகள் ஆக்கித்
தீத்தீ என்று உழக்கோலால் சாத்துவேன் ஆண்டே
** பள்ளியர் குடித்தரம் கூறுதல்
** கொச்சகக் கலிப்பா

#12
மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர்
பள்ளக் கணவன் எனின் பாவனை வேறு ஆகாதோ
கள்ளப் புள் வாய் கிழித்த கார் அழகர் முக்கூடல்
கொள்ளத் தமது குடித்தரங்கள் கூறினரே
** பள்ளியர் குடித்தரம்
** மூத்தபள்ளி
** சிந்து
** இராகம்: காம்போதி. தாளம்: அடதாளம்

#13
உத்தர பாகமான சித்திர நதிக்குத் தென்பால்
ஓடும் பொருநையுடன் கூடும் போதே
அத்தனை காலமும்தொட்டு இத்தனை காலமும் கண்டு
அடியடி வாழையாய் நான் குடியில் வந்தேன்
பத்திலே பதினொன்றாக வைத்தானில்லைக் குடும்பன்
பண்டே சரடுகட்டிக் கொண்டான் என்னை
முத்தமிழ் நாட்டு அழகர் கொத்தடியானுக்கு ஆன
முக்கூடல் மூத்தபள்ளி நானே ஆண்டே
** இளைய பள்ளி

#14
செஞ்சிக்கும் கூடலுக்கும் தஞ்சைக்கும் ஆணை செல்லும்
செங்கோல் வடமலேந்த்ரன் எங்கள் ஊரே
நெஞ்சில் குறித்த குளம் அஞ்சுக்கும் சக்கரக்கால்
நிலையிட்ட நாளில் பண்ணைத் தலையிட்டேன் நான்
கஞ்சிக்கும் தன்னிலே தான் கெஞ்சிப் புகுந்தவள் அல்ல
கண்டு ஆசைப்பட்டே கொள்ளும் பெண்டானவள்
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சைப் பள்ளனுக்கு ஏற்ற
மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே
** பள்ளன் குடித்தரம் கூறுதல்

#15
சுக்கிரத்தேவர் தாயைச் சக்கரத்தாழ்வார் கொன்ற
துட்டப் பிரமகத்தி விட்டுப்போகத்
தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர்
திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன்
பக்கமே தூரப் போயும் தக்க சோறு என் வெள்ளாண்மை
பள்ளா பள்ளா என்பார் மெய்கொள்ளாதவர்
மைக் கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல் முத்து உண்டாக்கும்
a வடிவழகக் குடும்பன் நானே ஆண்டே
** நாட்டு வளம்
** கொச்சகக் கலிப்பா

#16
கோட்டு வளம் கூறிய முக்கூடல் அலங்காரர் திரு
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள்
பாட்டு வளம் சேர குலப்பத்தனார் மாலிகைப் பூம்
காட்டு வளம் என்னக் கள மருதூர் செய்வாரே
** மூத்தபள்ளி
** சிந்து
** இராகம் : சங்கராபரணம். தாளம் : அடதாளம்

#17
மேடை ஏறித் தன் காலைப் பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்கப்
பேடை மாங்குயில் வாய் கொண்டு சேவல் பிளந்த வாய்-தனைப் பேசாமல் மூடக்
கோடை போய்விட்ட சோபனம் கொண்டு குளிர்ந்த கொன்றை முறும் தளிர் ஓட
வாடை ஓடிவரக் கோழி கூவும் வளமை ஆசூர் வடகரை நாடே
** இளைய பள்ளி

#18
வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதிக் குடை தாவக்
குன்று எலாம் தரமில்லை என்று ஆடவர் கொம்பு_அனார் முலைக் குன்றில் பதுங்க
மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லித்
தென்றல் ஓடிவரக் கோழி கூவும் சீவல மங்கைத் தென்கரை நாடே
** நகர் வளம்
** மூத்தபள்ளி

#19
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்
கண்ட பேரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும்
விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும்
அண்டர்நாயகர் செண்டலங்காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே
** இளைய பள்ளி

#20
சங்கம் மேடைகள் எங்கும் உலாவும் தரங்கமீன் பொன் அரங்கிடை தாவும்
திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களைத் தூவும்
பொங்கரூடு இளம் பைங்கிளி மேவும் பூவை மாடப்புறா இனம் கூவும்
வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே
** நாட்டு வளம்
** மூத்தபள்ளி

#21
கறைபட்டுள்ளது வெண் கலைத் திங்கள் கடம்பட்டுள்ளது கம்பத்து வேழம்
சிறைபட்டுள்ளது விண் எழும் புள்ளு திரிபட்டுள்ளது நெய் படும் தீபம்
குறைபட்டுள்ளது கம்மியர் அம்மி குழைபட்டுள்ளது வல்லி அம் கொம்பு
மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே
** இளைய பள்ளி

#22
காயக் கண்டது சூரிய காந்தி கலங்கக் கண்டது வெண் தயிர்க் கண்டம்
மாயக் கண்டது நாழிகை வாரம் மறுகக் கண்டது வான் சுழி வெள்ளம்
சாயக் கண்டது காய் குலைச் செந்நெல் தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்
தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம் சீவலமங்கைத் தென்கரை நாடே
** நகர் வளம்
** மூத்தபள்ளி

#23
சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும்
சாதி நால் வளம் நீதி பெருக்கும் தடத்து வாளை குடத்தை நெருக்கும்
போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும்
ஆதிநாதர் அனாதி ஒருத்தர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே
** இளைய பள்ளி

#24
தத்தும் பாய் புனல் முத்தம் அடைக்கும் சாலைவாய்க் கன்னல் ஆலை உடைக்கும்
கத்தும் பேரிகைச் சத்தம் புடைக்கும் கலிப்பு வேலை ஒலிப்பைத் துடைக்கும்
நித்தம் சாறு அயர் சித்ரம் படைக்கும் நிதி எல்லாம் தன் பதியில் கிடைக்கும்
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே
** நாட்டு வளம்
** மூத்தபள்ளி

#25
மீது உயர்ந்திடும் தெங்கு இளநீரை மிடைந்த பூகம் சுமந்து தன் காயை
சூதம் ஒன்றிச் சுமக்கக் கொடுக்கும் சூதம் தன் கனி தூங்கும் பலாவின்
ஓதும் அந்தப் பலாக்கனி வாழை உளுக்கவே சுமந்து ஒண் குலை சாய்க்கும்
மாதுளம் கொம்பு வாழையைத் தாங்கும் வளமை ஆசூர் வடகரை நாடே
** இளைய பள்ளி

#26
பங்கயம் தலைநீட்டிக் குரம்பினில் பச்சை இஞ்சியின் பார் சடை தீண்டும்
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தைத் தடவி மெள்ளத் தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய்க் கதிர்ச் செந்நெல் அளாவி நிற்கும் அச் செந்நெலும் அப்பால்
செங்கரும்புக்குக் கைதரும் போல் வளர் சீவலமங்கைத் தென்கரை நாடே
** குயில்
** கொச்சகக் கலிப்பா

#27
தேவாதிதேவர் திருமுக்கூடலின் பெருமை
நாவால் வழுத்தி வளநாட்டு இயல்பு கூறிய பின்
பூ வாசனை சேர் புரி_குழலார் பூங்குயிலைக்
கூவாய் என்று அந்தக் குயில் மொழியைக் கொண்டாரே
** சிந்து
** இராகம்: ஆனந்தபைரவி. தாளம்: சம்பைதாளம்

#28
கார் பூத்த வண்ணனார் கண்ணனார் அழகர்படிக் கட்டளைகள் உயரவே கூவாய் குயிலே
பேர் பூத்த முக்கூடல் மிக்க ராமானுசப் பீடம் மிக விளங்கவே கூவாய் குயிலே
பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே
சீர் பூத்த அருவி வரு திருமலைக்கொழுந்து முகில் செங்கோன்மை ஓங்கவே கூவாய் குயிலே

#29
சீவலப்பேரி தமிழ் மூவகைக் கல்வியும் செல்வமும் பெருகவே கூவாய் குயிலே
மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே
பாவலர்க்கு உபகாரி காவை அம்பலவாணன் பல கிளையும் தழைக்கவே கூவாய் குயிலே
காவலர்க்கு உயர் பெருமை மேவு தேர்ப்பால்_அழகர் கட்டளைகள் தழைக்கவே கூவாய் குயிலே

#30
பொருநை அம் திருநதியின் இரு கரையும் இரு பூவும் பூஞ்சாலி விளையவே கூவாய் குயிலே
அருள் பெறும் தரும நிதி சாத்தூரில் பெரியநம்பிஅய்யங்கார் வாழவே கூவாய் குயிலே
பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே
கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே
** தெய்வ நிலை போற்றுதல்
** கொச்சகக் கலிப்பா

#31
காரிப் பிரான் புதல்வர் கல்வித் தமிழ் வேதம்
பாரித்த முக்கூடல் பண்ணவனார் நல் நாட்டில்
மாரிப் பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம்
சேரிக் குரவை எழத் தெய்வநிலை போற்றினரே
** சிந்து
** இராகம்: புன்னாகவராளி. தாளம்: அடதாளம்

#32
திங்கள் மும்மாரி உலகு எங்கும் பெய்யவே தெய்வத்தைப் போற்றி வந்தால் கைதரும் காண்
பொங்கலும் இட்டுத் தேங்காயுங் கரும்பும் பூலா உடையாருக்குச் சாலக் கொடுங்கள்
குங்குமத்தோடு சந்தனமும் கலந்து குமுக்கா உடையார் அய்யர்-தமக்குச் சாத்தும்
கங்கணம் கட்டியே எழு செங்கடாயும் கரையடிச் சாத்தா முன்னே விரைய வெட்டும்

#33
பூத்த தலைச் செஞ்சேவல் சாத்திரத்தாலே புலியூர் உடையார் கொள்ளப் பலிதானிடும்
வாய்த்த சாராயமும் பனை ஊற்றுக் கள்ளும் வடக்கு வாய்ச் செல்லி உண்ணக் குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே
**மழைக்குறி
** கொச்சகக் கலிப்பா

#34
முத்தி தர வந்த திருமுக்கூடல் மாதவர் தாள்
பத்தி மறவாத பண்ணைப் பட்சேரிப் பள்ளர் எல்லாம்
புத்தியுடன் தெய்வநிலை போற்றிய பின் வான முகில்
எத்திசையும் பெய்ய மழையின் குறியுண்டாகியதே
** சிந்து
** இராகம்: ஆனந்தபைரவி. தாளம்: அடதாளம்.

#35
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி மலை
யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே
நேற்றும் இன்றும் கொம்புசுற்றிக் காற்று அடிக்குதே கேணி
நீர்ப்படு சொறித் தவளை கூப்பிடுகுதே
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை
தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே
போற்று திருமால் அழகர்க்கு ஏற்றமாம் பண்ணைச் சேரிப்
புள்ளிப் பள்ளர் ஆடிப்பாடித் துள்ளிக்கொள்வோமே

#36
இக்கரைக் காலில் பொருநை அக்கரைக் காலின் மழைக்கு
ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம்
தக்க தோணியைத் துறையில் சிக்கெனக் கட்டும் படல்
தாழைக்குடை கொங்காணியும் வேளைக்கே வேண்டும்
பக்கமே ஊசிக்காம்பு சுழுக்கு வாய்க்கு இடும் சீலைப்
பந்தமும் விளக்கெண்ணெயும் முந்தவே தேடும்
முக்கூடல் அழகர் பண்ணை மிக்க சேரியில் பள்ளர்
முழுதும் குரவையிட்ட எழு தினம் ஆடீர்
** மழை பெய்தல்
** கொச்சகக் கலிப்பா

#37
சூலானது முதிர்ந்தால் தோன்றாதோ பேறு செங்கண்
மால் ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ
வேலாவலய முந்நீர் மேய்ந்து கருக்கொண்ட முகில்
காலானது ஊன்றி அந்தக் கால முறை காட்டியதே

#38
காவுக்கு இறைவனாகும் இந்திரன் ஏவல் பணிகொண்டு எழுந்த கார்
கடலில் படிந்து திருவில் கொட்டி அடல் முக்கூடல் அரியுமாய்
பூவுக்கு உயர்ந்த கலை மின்னோடு மேவிக் கமலத்து அயனுமாய்ப்
புனலைத் தரித்து வரையில் ஏறிக் கனலைத் தரித்த சிவனுமாய்த்
தாவிப் பறந்து பணிகள் பதுங்கக் கோவித்து எழுந்த கருடனும்
தானே ஆகி உலகுக்கு உரிமை ஊனே ஆகி உயிருமாய்க்
கோவில் பெரிய வடமலேந்திரன் மாவில் கறுத்துப் பொழிந்த பின்
குளிருகின்றது கோன் கழுத்தினில் வெளிறுகின்றது வானமே
** ஆற்று வரவு
** கொச்சகக் கலிப்பா

#39
பாயும் கருடப் பரியார் முக்கூடலிலே
காயும் பொருப்பு என் களபத்தனப் பொருப்பே
சாயும் புயல் அமுத தாரை குளிரக்குளிரத்
தோயும் பொருப்பர் கலை தோய்ந்து ஈரம் தோயாரே
** குறிஞ்சி
** சிந்து
** இராகம்: கலியாணி. தாளம்: அடதாளம்

#40
வானக் குருசில் வள்ளலாய் வரைக் கோனைப் பரிசு கொள்ளலாய்
வழங்குமாறும் புறப்பட்டே புனல் முழங்குமாறும் திறப்பட்டே
தானக் களிறு படிந்திடக் கொலை ஏனக் களிறு மடிந்திடத்
தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும்
கானக் குளவி அலையவே மதுபானக் குளவி கலையவே
காட்டுச் சாதி வேரில் போய்க் குற மோட்டுச் சாதி ஊரில் போய்ச்
சேனைப் புரவி அழகனார் மருகோனைப் பரவி அழகு பூந்
தினையை வனத்தில் உதிர்த்துப் பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே
** கொச்சகக் கலிப்பா

#41
பால்வெள்ளத்து ஆறு உடைய பண்ணவர் முக்கூடலின்-கண்
வேல் வெள்ளத்து ஆறு எமது மின் இறைக்கும் கார்காலம்
கால் வெள்ளத்து ஆறு கரை கண்டு கரை காணாமல்
மால் வெள்ளத்து ஆறு வரல் இரவு தீர்வாயே
** பாலை
** சிந்து
** இராகம்: புன்னாகவராளி. தாளம்: அடதாள சாப்பு

#42
எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும்
இருப்பை ஈந்து கள்ளியும் கரைப் பொருப்பை ஈர்ந்து தள்ளியும்
முதிரும் பாறு முறையிடக் கழுகு உதிரும் பாறு சிறையிட
முள் வேல் எயினக் கிடை எழப் பதி வெள் வேல் எயினப் படை எழப்
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன்
பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே
கதிரும் காலும் போலவே சென்று உதிரம் காலுஞ் சூல வேல்
கன்னி முலையில் சுரந்த பால் என முன்னி முலையில் பரந்ததே
** கொச்சகக் கலிப்பா

#43
முந்நீர் அடும் கணையார் முக்கூடல் மால் வரையின்
மின் நீர் வரக் கான் விளங்கிநின்றவாறேயோ
நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே
உன்னீர் அவை கண்டு உவந்து மெல்லச் சொல்லீரே
** முல்லை
** சிந்து
** இராகம்: சங்கராபரணம். தாளம்: அடதாளம்

#44
முல்லைக் கோடி அடுக்கையின் மலி கொல்லைக் கோடி கடுக்கையின்
முட்டித் தோன்றி மவ்வலை மது கொட்டித் தோன்றி வெவ் அலை
இல்லைச் சாடி எண்ணெயும் அயல் எல்லைச் சாடி வெண்ணெயும்
எள்ளும் அவரை துவரையும் உறை கொள்ளும் அவரை எவரையும்
தொல்லைப் பாடு பண்ணியும் துறுகல்லைப் பாடு நண்ணியும்
தொடுத்துப் பூவை நெற்றியைத் தொட மடுத்துப் பூவை எற்றியே
குல்லைத் தானம் தேக்கி மாலுக்கு எல்லைத் தானம் ஆக்கி மால்
கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே
** கொச்சகக் கலிப்பா

#45
குன்றைக் குடை கவித்த கோவலர் முக்கூடலிலே
இன்றைக்கு இரவில் இவளை எவர் தேற்றுவரே
கன்றைக் கழுத்து அணைத்துக் கற்றாவைக் கூவும் அண்டர்
கொன்றைக் குழல் பூங்குழலி செவிக்கு ஆகாதே
** மருதம்
** சிந்து
** இராகம்: புன்னாகவராளி. தாளம்: அடதாளம்

#46
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே
பகட்டுக் கமலை வட்டத்தில் புனல் தகட்டுக் கமலக் குட்டத்தில்
போயும் எருமை பதறவே உரம் ஈயும் எரு மை சிதறவே
புழுதிச் சாலை நனைத்துமே குளிர் கொழுதிச் சாலை அனைத்துமே
சாயும் உரலும் கரும்பும்தான் அதில் பாயும் முரலும் சுரும்பும்தான்
சரிய முதலை முடுக்கியும் வாழைப் பெரிய முதலை அடுக்கியும்
காயும் தவள வாரணம் எதிர் ஆயும் தவள வாரணம்
கழனிக் குடிலைத் தொகுத்து நெய்தல் அம் துழனிக் குடிலில் புகுந்ததே
** கொச்சகக் கலிப்பா

#47
முன்றில் குட வளை ஊர் முக்கூடல் ஊரர் செய்த
நன்றிக்கு இணையில்லை நான் நெடுமால் ஆனேனே
வென்றித் திருநாமம் வேறோ பொருநைநதி
அன்றில் குலங்காள் அவர்க்கு இது நீர் சொல்லீரே
** நெய்தல்
** சிந்து
** இராகம்; ஆனந்தபைரவி. தாளம்: அடதாளம்

#48
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலைக் கயக்கியே
புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே
பகுந்து நுழை அப் பட்டினம் திரை முகந்து நுழையப்பட்டு இனம்
படைத்திடாமை நிகழவே நிலை கிடைத்திடாமை இகழவே
உகுந்த தண்டலை நீக்கியே புனல் வகுந்து தண்டு அலை தாக்கியே
உப்பளத்தாரை ஓட்டியும் புனல் அப் பளத்தாரை ஈட்டியும்
தகும் தடம் கடல் இறைவனைத் தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில்
சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே
** கொச்சகக் கலிப்பா

#49
கங்கமே ஊரும் கடவுளர் முக்கூடலிலே
தங்கமே தேடக் தணந்தார் மணந்திலரே
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண்
சங்கமே செங்கை-தனில் சங்கமே தாங்கேனே
** ஆற்று வெள்ளம்
** பொருநையாறு
** சிந்து
** இராகம்: காம்போதி. தாளம்: அடதாளம்.

#50
உதைத்து விசைகொண்டு எதிர்த்துக் கடலின் உதரம் கீறி அதிரும் நீர்
உதயவரைக்கும் பொதியவரைக்கும் ஒத்துப்போகும்படி முற்றும் போய்
பதைத்து நெளியும் துதிக்கை மூக்கன் பண்ணை சாளை எண்ணெய்மீன்
பசலி திருக்கை கசலி கெளுத்தி பண்ணாங்கும் பழம்பாசிமீன்
வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன்
மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி
புதைத்து மணலில் ஒதுக்கிக் கடலைப் பொரு நம் அழகர் கருணை போல்
பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே
** சிற்றாறு : சித்திரா நதி

#51
குற்றாலத் திரிகூட மால் வரை உற்றே மேகம் பொழிந்த நீர்
கூடிப் பொருநை நாடித் திருமுக்கூடல் பதியை வலம்கொண்டே
வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன்
மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன்
பற்றா அயிரை கெண்டை கெளிறு பரு வராலும் அணையிலே
பாயக் காலில் பாயக் குளத்தில் பாய வயலில் பாயவே
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மனப் பெருமை போல்
சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே
** பண்ணைக்காரன் வரவு
** கொச்சகக் கலிப்பா

#52
ஆறு பரந்து அப்பாலும் அந்நிலத்தார் இந்நிலத்தில்
பேறுடனே மற்ற நிலப் பேறும் பெற நினைந்தே
ஏறு புனல் கண்டதன் பின் எம்பெருமான் முக்கூடல்
வீறு தரும் பண்ணைவிசாரிப்பான் வந்தானே

#53
**சிந்து
** இராகம் பைரவி தாளம் ஆதி
மாறுகண்ணும் பருத்திப்பைக் கூறு வயிறும் கீரை
மத்துப் போல் தலையும் சுரை வித்துப் போல் பல்லும்
நீறு போல் வெளுத்த ஊளை ஊறு நாசியும் தட்டி
நெரித்த மாங்கொட்டை போல் ஈ அரித்த வாயும்
தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல்
சண்ணைக் கடாப் போல் நடையும் மொண்ணை முகமும்
வேறு கீறி ஒட்டவைத்த ஏறு காதுமாய் நேமி
வீரனார் முக்கூடல் பண்ணைக்காரனார் வந்தார்

#54
மூத்தபள்ளி முகம் பார்த்து வார்த்தை சொல்வாராம் பெரு
மூச்சுக் கொண்டு இளையபள்ளி பேச்சுக் கேட்பாராம்
சாத்தி மகள் காத்தி-தன்னைப் பேத்தி என்பாராம் மெள்ளச்
சன்னையாய்க் களத்திலே வா பின்னை என்பாராம்
வாய்த்த தடிக் கம்பை ஊன்றிச் சாய்த்துப் பார்ப்பாராம் ஊத்தை
வாய்க்கு மெல்லப் புகைகுடிக்கத் தீக்குப் போவாராம்
காத்திராத பள்ளனைப் பரமார்த்தி என்பாராம் குச்சில்
கண்ணைச் சாய்ப்பாராம் முக்கூடல் பண்ணைக்காரனார்
** மூத்தபள்ளி முறையிடுதல்
** கொச்சகக் கலிப்பா

#55
எண்ணெய் ஆர் பூந்தயிலம் ஏற்ற குழல் மூத்தபள்ளி
பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மனக் கள்ளம் எல்லாம்
வெண்ணெய் ஆர் வாயின் இசை வேய் அழகர் மாயம் இதே
பெண்ணை யார் கையில் பிடிப்பார் பிடிப்பாரே

#56
** சிந்து
** இராகம் தோடி தாளம் அடதாளம்
தூக்குணிப் பள்ளன் ஏய்க்கிற ஆட்டத்தை துக்குணிக் கேளும் முக்காலும் சொன்னேன்
காக்கும் காலணை பார்க்கவும் செய்யான் காலம் செய்வது கோலம் செய்யுமோ
போக்கு நீக்கு இல்லை மூக்கிலே கோபம் என் புத்தியும் கேளான் சத்துரு நீலன்
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே

#57
கட்டின மாட்டைத் தொட்டு அவிழான் ஒருக்காலும் தான் உழக்கோலும் கை தீண்டான்
தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான்
வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான்
பெட்டியால் வாரிப் பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்குத் தேய்த்தான் காண் ஆண்டே
** இளைய பள்ளி கூறுதல்
** கொச்சகக் கலிப்பா

#58
மாற்றவள்-தன் சொல் கேளா மருதூரில் பள்ளியும்தான்
ஏற்றபடி சொன்னாள் இரண்டுபடில் யார் பொறுப்பர்
தேற்றம் அரிது அன்றோ சிறுமை வராமல் பெருமை
ஆற்ற வல்ல மாதர் அழகர் புய மார்பினரோ

#59
** சிந்து
** இராகம் காம்போதி தாளம் ஆதி
குடிலில் கிடந்த பள்ளனை முக்கூடல்பள்ளி கூப்பிட்டு எழுப்பி முந்தாநாள்
விடியப் போ வேலையில் என்றாள் அவனும் போனான் வெள்ளமும் மேல்வரத்து ஆச்சு
கடினப் பிரவத்தி ஏதோ திரும்பிவரக் கண்டிலேன் இன்று மூன்று நாள்
அடிமைக்கு நேற்று இரா எல்லாம் உறக்கம் இல்லை அழகர் அறிவார் காண் ஆண்டே

#60
முப்பாலும் சோறும் உண்ணவே நடத்திக் கொண்டீர் மூப்படியானும் புறப்பட்டான்
அப்பால் அவனுக்கு ஒன்றானால் நயினார் சேதம் ஆமே அடியாளுக்கு என்ன
துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன்
இப்பால் அழகர் செய்ததைக் காணலாம் என்றே இருக்கிறேன் என் செய்வேன் ஆண்டே
** பண்ணைக்காரன் கோபித்தல்
** கொச்சகக் கலிப்பா

#61
திசைபோன சூது கற்ற மருதூர்ப்பள்ளி
அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன்
இசையாத வார்த்தை சொன்னாய் என்று பண்ணையான் எழுந்து
கசையால் அடிப்பன் என்று கண் சிவந்து கூறினனே
** சிந்து
** இராகம் மத்தியமாவதி தாளம் ஆதி

#62
முக்கூடல்பள்ளியைப் போல்
சொக்காரி நீ அல்லவே
வக்கணை ஏன் மருதூர்
அக்கிரமப் பள்ளி

#63
குச்சுக்குள்ளே பள்ளனையும்
வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய்
தைச்சுப்போடுவேன் மருதூர்க்
கச்சற்காய்ப் பள்ளி
** பள்ளன் வெளிவருதல்

#64
கடின உரையைக் கேட்டு
வடிவழகக் குடும்பன்
குடிலிலிருந்தே அரை
நொடியில் வந்தான்
** பண்ணைக்காரன் வினவுதல்

#65
பள்ளனைப் பண்ணைக்காரன்
கள்ளமாய்ப் பார்த்துப் பள்ளா
துள்ளாதே பண்ணைச் செய்தி
விள்ளடா என்றான்
** பள்ளன் கூறுதல்
** கொச்சகக் கலிப்பா

#66
பத்து வடிவத்து அழகர் பண்ணையான் கேட்டபடி
வித்து வகை மாட்டு வகை மேழி ஏர்க்கால் முதலாய்க்
கொத்து வகை அத்தனையும் கூட்டி வரத்தும் செலவும்
வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே
** சிந்து
** இராகம் மோகனம் தாளம் அடதாளம்

#67
பழகினீர் அறிவீர் என் சமர்த்துப் பயிரிடாக் கள்ளப் பள் அல்லவே நான்
உழவுதான் ஒரு பன்றி உழும் தரை ஒன்று அல்லாமல் இரண்டு எனக்கு இல்லை
அழகர் ஏவலினாலே இலங்கை அழித்து மீளும் குரங்கு உள்ளமட்டும்
கிழமை-தோறும் கதிர் முளைத்தாலும் கிடக்கவே ஒட்டுமோ பண்ணை ஆண்டே
** வித்து வகை

#68
பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியைப் பண்டு நம் பெருமாள் கட்டழித்தார்
செலவு போனதும் போய்ச் சில பூம்பாளை செண்டலங்காரர் தோப்புக்கே காணும்
கலக வேல் கைத் திருமங்கை ஆழ்வானைக் காணேன் மச்சுமுறித்தானைக் காட்டிச்
சொலவொண்ணாத் தெய்வதாசிகளுக்கே சொரிகுரும்பை விற்றார் பலர் ஆண்டே

#69
எங்கும் போற்றும் பெருவெள்ளை முன்னம் இராமர் சேனைக்கு உண்டாம்படி ஆச்சு
தங்கும் பேரைக் குலைவாழை காய்த்தது சற்றுமோ நெல் அரிசி காணாது
பொங்கும் போரில் மறுவில்லி நீலப் புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ
அங்குமிங்கும் கொண்டாடுவது எல்லாம் அறிவேன் பாரக் கடுக்கன் காண் ஆண்டே

#70
ஈடிலா வகைக்கு இன்னம் எழுதி இராசவாணனை இரண்டு பங்கிட்டு
நாடியே காவை அம்பலவாணநயினார் பேரில் பின் பாதியும் கூட்டித்
தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே
கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனைக் கேளும் காண் ஆண்டே
** மாட்டு வகை

#71
அதிசயம்-தன்னைக் கேட்கில் முக்கூடல் அழகர் பண்ணைக்கு உழவுமாடு எங்கே
விதிவசம்-தன்னில் ஆயிரமல்லியன் மேல் திசை முகம் சேர்ந்தது காணேன்
சதியிலே செப்பறை புகு மாட்டைச் சடை அடையாளம் போய்ப் பார்க்கவேணும்
எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே

#72
ஒற்றைக் கொம்பனைத் தாண்டவராயன் உள்ளூர்க் கோவிலுக்குள்ளே அடைத்தான்
மற்றைக் காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும்
பற்றைக் காத்துக்கிடக்கும் ஒரு செம்பருந்து சாயல் சுமைக்குத் தளப்பன்
புற்றைக் காத்திடும் பாம்பு கடித்துப் பொறாது விண்ணில் பறக்கும் காண் ஆண்டே
** ஏர்க்கால் வகை

#73
திருமுக்கூடல் அழகர்க்கு இளைய தெரிவை நீலியைத் தேவியாய்க் கொண்ட
மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார்
விருதுக்கே காரைக்காட்டார் வழக்கிட்டு மேழி சேர முன் வாங்கிக்கொண்டார்கள்
கருதிப் பெண்ணுக்கும் ஆணுக்கும் காமன் கலப்பை முற்றும் செலவிட்டான் ஆண்டே

#74
அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டபத் தூண் சாரம் ஏற்றக்
கனக நீள் வடம் கோடி கொடுத்தேன் கார் வரைக்கும் உழும் வடம் ஒன்றே
என சொல்வேன் நுகம் எண்ணிக்கை நாலுக்கு இருந்தது ஒன்று உழத் தன் நுகம்-தன்னைத்
தினமும் நான் பகல் காணேன் இராத்திரி தேடிப் பூரம் அடுக்கும் காண் ஆண்டே
** ஆயரை வருவித்தல்

#75
ஏது செய்வேன் என்று ஓதிய பள்ளன்-தன் ஏய்ப்புக் கேட்டு அந்தப் பேய்ப் பண்ணைக்காரன்
பாதி கேட்பதும் சோதனை செய்வதும் பார்க்கலாம் பின்பு தீர்க்கலாம் என்றே
ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்தக்
கோதிலான் அந்தச் சாதி இடையனைக் கூட்டிவா பள்ளா கூட்டிவா என்றான்
** பள்ளன் ஆயரைத் தேடிப் போதல்
** கொச்சகக் கலிப்பா

#76
மைப் புயலே போலும் வடிவழகர் பண்ணை வயல்
அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே
ஒப்பரிய பள்ளன் உவந்து பண்ணை ஆண்டவனார்
செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே
** சிந்து

#77
வீறான முக்கூடல் விளங்கு பண்ணை உரம் ஏற்ற
மாறாமல் ஆடு கொண்டுவருவேன் காண் ஆண்டே

#78
தொழுது விடைகொண்டு நீர் சொன்னபடி ஆடு கொண்டு
பொழுது புகும் முந்தி வந்து புறப்படுவேன் ஆண்டே

#79
குட்டிகளும் கொண்டு சிறு குடில்களையும் கொண்டு ஆட்டுப்
பட்டிகளும் கொண்டு இன்று பகல் வருவேன் ஆண்டே

#80
அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர
உழவு வயல் உள்ளது எல்லாம் உரம்வைப்பேன் ஆண்டே
** ஆயன் வரவு
** கொச்சகக் கலிப்பா

#81
கண்டார் பயப்படத் தன் கையில் சுழற்றுதடி
செண்டாடிக்கொண்டு பள்ளன் சென்று அழைத்த சொற்படியே
தண்டாத சங்கத் தமிழ் அழகர் முக்கூடல்
கொண்டாடும் கோனேரிக்கோன் வந்து தோன்றினனே
** சிந்து

#82
பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல்
பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே
நூல் அழகில் வெண் குதிரை வால் அழகில் வாய்த்த நரை
நுரை வாய் எனும் குளத்தில் திரை போல் அலைந்திட
மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல்
வடிவழகர் வயலில் எருப் பொடி உழவில் வைக்கவே
கோல் ஒரு கைக் கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கிக்
கோனேரிக்கோன் ஆட்டுக் கிடை கொண்டுவந்தான்
** இடையன் சொல்லுதல்

#83
பூதக்கோன் பொது ஆட்டை வாதுக்கே ஒரு பாம்பும்
புலியும் காத்திருக்கும் அது கலி கண்டாய் குடும்பா
வேதக்கோன் கிடை ஆண்டது ஏதுக்காய் அவன் சாதி
வீதி-தொறும் கிடந்த கிடை பேதியான் குடும்பா
தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே
தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா
நாதக்கோன் முக்கூடல் ஆதிக்கோன் பண்ணை வயல்
நானடா உரம் ஏற்றும் கோனடா குடும்பா
** மூத்தபள்ளி முறையீடு
** கொச்சகக் கலிப்பா

#84
இடையரைக் கொண்டே வயலில் ஏவி இளையாள் குடிலில்
கிடை நமக்கு நல்ல கிடை எனச் சென்றான் குடும்பன்
அடைவுபட்ட செய்தி பண்ணை ஆண்டவனார் கேளும் என்றே
படைதொடுத்து முக்கூடல்பள்ளி முறையிட்டாளே
** சிந்து

#85
அடுத்திடும் வீட்டார் சொல்லிக்கொடுத்திடமாட்டார் கிடைதான்
ஆட்டினில் கிடையோ இளையவள் வீட்டினில் கிடையோ
படுத்திடும் பள்ளன் வேலையைக் கெடுத்திடும் கள்ளன் எனைக் கண்டு
பதறியே விழுந்தான் கைகால் உதறியே எழுந்தான்
எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள்
இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர்
தடுத்து எனை ஆளார் அழகரும் நடுத்-தனைக் கேளார் கடும் சிறைச்
சாலையில் போட்டால் வளைவான் வேலையில் ஆண்டே

#86
வரத்தினை மீறும் செலவுக்குத் தரித்திரம் ஏறும் பேய்க் கொடை
மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான்
உரத்திடும் காளை சுழியன் நரைத் தலை மோழை புதியவன்
ஊட்டுக்குக் குறித்தான் வில்லடிப்பாட்டுக்குப் பொறித்தான்
பரத்தி கைச் சுள்ளும் அக்கரைத் திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு
பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான்
கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு
காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே

#87
தான் உட்கை போலும் சளம்செய்து மீனுக்கு வாலும் பாம்புக்குத்
தலையையும் காட்டி எனக்கு ஆசைவலையையும் பூட்டித்
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம்
சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான்
ஈனத்துக்கு இவளாம் தன் வெகுமானத்துக்கு அவளாம் காலவன்
இங்ங்கே தரியான் கனவிலும் அங்ங்கே பிரியான்
ஊனுக்கும் உயிராம் பூமிக்கும் வானுக்கும் பயிராம் அழகருக்கு
உதவும் பள் வேண்டில் அவன் இனிப் பதனம் காண் ஆண்டே

#88
ஆருக்கும் பணியான் சீவலப்பேரிக்குள் கணியான் வில் என்னும்
அரிப்பிட்டுப் போட்டான் பள் வரி தெரிப்பிட்டுக் கேட்டான்
ஊருக்குள் ஏற்றம் இவன் இந்தச் சேரிக்குள் நாற்றம் குடும்பு செய்து
ஊராருக்கு உழைத்தான் அழகர் சொம் மாறாகப் பிழைத்தான்
ஏருக்குள் மாடும் முந்தின காருக்குள் சூடும் தன் கிளை
எவருக்கும் பொதுவாம் ஆட்கொள்ளும் அவருக்கும் அதுவாம்
பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும்
பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே

#89
ஆனைக் குட்டியைப் போல் எருமையை ஞானிச்செட்டி கைக்கே பணம் பதி
னைஞ்சுக்குக் கொடுத்தான் கொழுந்தியார் குஞ்சுக்கு இட்டெடுத்தான்
மீனைக் கொண்டு அளிப்பான் கருவாட்டு ஊனைக் கொண்டு ஒளிப்பான் நான் சொன்னால்
வீம்புகள் அடிப்பான் அவள் சொன்னால் பாம்பையும் பிடிப்பான்
கோனைக் கண்டவனோ கோன் தலைப் பேனைக் கண்டவனோ போய் அவள்
குச்சினில் வீழ்ந்தான் வயல் எருவைச்சு இனி வாழ்ந்தான்
பூனைக்குட்டியைப் போல் பதுங்கிச் சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்
பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே

#90
ஏச்சுக்குப் பிறந்தான் வரவரக் கூச்சத்தை மறந்தான் இளையவள்
இளமையைக் குறித்தான் முதிரும் என் வளமையைப் பறித்தான்
நீச்சுக்கு மேலே நிலைப்பு என்ன பேச்சுக் கையாலே உழச் சற்றே
நினைப்பதும் இல்லை எனைத் தேடிக் கனைப்பதும் இல்லை
தீச் சுட்டது ஆறும் பழித்திடும் நாச் சுட்டது ஏறும் அவனை முன்
சீயென்று போட்டேன் நான் இனி வாய் ஒன்றும் காட்டேன்
பேச்சிட்டுப் பாரும் மரக்கணு வாச்சிக்குத் தீரும் பயப்படப்
பிடித்தது பிடியாய்க் குட்டையில் அடித்திடும் ஆண்டே
** பள்ளன் வரவு
** கொச்சகக் கலிப்பா

#91
கத்தர் திருமுக்கூடல் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன்
சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின்
பொய்த்த மொழி பேசி முதல் போன பள்ளன் மீண்டும் எரு
வைத்து வயலுற்று வருவது போல் வந்தானே
** பள்ளன் நிலவகை கூறுதல்
** சிந்து
** இராகம் பைரவி தாளம் ரூபகம்

#92
மாரிச் சீவலப்பேரித் தண்ணீர் பாய் கண்ணாறான
வாசவன் தொழும் அழகர் பேர் உள்ள கேசவன் திருத்தும்
காரில் பயிரிட்டு ஊருக்கு அதிகமாய்க் கதலிவாழை
காய்த்த வயலும் கீர்த்தி சேர் நயினாத்தையார் திருத்தும்
சாரல் கறுக்கும் ஈரத் தூற்றலால் நாற்றுப்பாவும்
சன்னை வெட்டியான் வாய்க்கால் போக்கும் வன்னியடித்திட்டும்
கோரைக் குண்டு ஓடை ஓரத்தில் புரவும் பார்வையான
குத்துக்கல்லு குளத்துப் பற்றும் முத்தன் பகுதியும்
வீரபாண்டியப்பேரிப் பாய்ச்சலும் நாச்சியார் திரு
விடையாட்டமும் சுமைதாங்கி வட்டமும் கடை பத்தித்தடியும்
பாரத் தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்
படைக்குத் தெற்கு வடக்குக் குளங்கல் மடைக்கும் உள் பற்றும்
வாரத்து உடையானேரிக் கட்டளையும் வட்டமாம் ஒரு
வர்க்கத்தில் ஆந்தைக்குளமும் தோணி நிற்கும் துறைச் சுற்றும்
சேரச் செய் பல பேரிட்டு உள்ளது எல்லாம் எருவைத்தே இன்று
திரும்பினேன் இன்னம் தேவரீர் ஏவல் விரும்பினேன் ஆண்டே
** பள்ளனைத் தொழுவில் அடித்தல்
** கொச்சகக் கலிப்பா

#93
எந்தை திருமுக்கூடல் ஏரியில் நீ ஆடுவைத்துத்
தந்த விதமோ மருதூர்ச் சங்காத்தி வீட்டு உறக்கம்
சிந்தை தொட்டுப்பார் எனக் கண் சிவந்து பண்ணைக்காரன் அங்கே
வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே
** இளைய பள்ளி புலம்பல்
** சிந்து
** இராகம் காம்போதி தாளம் அடதாளம்

#94
பழிகாரி முக்கூடல்பள்ளி சரடு செய்த பள்ளன் என்று முகம் பாராமல்
வழியே போகும் களவு எல்லாம் தலையின் மேல் வலித்து இட்டுப் பற்றுக்குறித்தாள்
கொழியல் அரிசி இட்டாலும் குப்பை கிண்டும் கோழி என்பதைப் புதுக்கினாள்
அழியாத காசு அழியுமோ நான் ஏது செய்வேன் அழகர் திருநாமப் பள்ளா
** பள்ளன் தேற்றுதல்

#95
முடுக வா ராசியம் உண்டு குண்டுணிக்காரி மூத்தபள்ளி பார்க்க வருவாள்
நடுவே தெய்வம் சோதிச்சுது ஐயோ பண்ணை நயினார்க்கும் செவி கண்ணாச்சே
கடுக நீ போய்விடு சும்மா சகதியிலே கல் எறிந்த கதை ஆக்காதே
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி
** மூத்தபள்ளி சோறு கொண்டுவருதல்

#96
எங்கே கிடக்கிறான் பள்ளன் நயினாரே ஏறா விண்ணப்பம் ஒன்று உண்டு
செங்கான் எனக்கு மூத்தவன் ஏதுக்கோ தெய்வத்துக்கு ஆக்கிவைத்தானாம்
அங்கேயிருந்து சட்டியில் கறியும் சோறும் அனுப்பினான் நான் தனித்து உண்பேனோ
உங்கள் அடியானுக்கு நான் கொடுத்துப்பார்த்தால் உண்பானோ உண்ணானோ ஆண்டே
** கொச்சகக் கலிப்பா

#97
தாரம் இரண்டானாலும் தன் கணவன் வாஞ்சையினால்
வாரமுடன் முக்கூடல் வந்த பள்ளி தந்திரமாய்க்
காரணம் வேறொன்று பண்ணைக்காரனுக்குச் சொல்லி மனச்
சோரமுடன் பள்ளனுக்குச் சோறு கொண்டு வந்தாளே
** பள்ளனிடத்துச் சொல்லுதல்
** சிந்து

#98
மருந்துக் கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு
திருந்தப் பேசின வார்த்தையும் கேளாய் நான் தெற்கே பார்த்தால் வடக்கே நீ பார்ப்பாய்
பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டாப் போல் அகப்பட்டாய் மரத்தில்
பொருந்தத் தன் வினை தன்னைச் சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா
** பள்ளன் வேண்டல்

#99
மிஞ்சிப் போனதை ஏன் சொல்லவேணும் விருந்து விட்ட பின் வெட்டினார் உண்டோ
கொஞ்சப் பேச்சுகள் சொல்லாதே வாய்த் தண்ணீர் குடித்தாலும் கொப்புளித்தாலும் ஆமே
பஞ்சில் பற்றும் நெருப்புப் போல் நெஞ்சில் பழம் பகை இன்னும் பற்றவையாதே
கெஞ்சிப் பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி
** மூத்தபள்ளி கூறுதல்

#100
முட்டிவிட்டுக் குனியும் பழங்கதை மூதலிக்கிறாய் பேதலித்துப்போய்க்
கெட்டி கெட்டி இளையவள் சொல் அல்லால் கிழட்டுப் பள்ளி சொல் பண்ணையார்க்கு ஆமோ
கட்டி நான் பேசப்போமோ அரண்மனைக் காரியம் என்றன் கைக்குள்ளே உண்டோ
வட்டிலுக்குள் வாய்வைத்தது எல்லாம் துறை வடிவழகர் திருநாமப் பள்ளா
** பள்ளன் வேண்டல்

#101
பக்குவம் சொல்ல நீதியோ நான் இந்தப் பாடுபட்டும் இனி அறியேனோ
சக்களத்தி அவள் என்று உனக்குச் சரி சொன்னால் அந்தத் தாழ்ச்சி உனக்கே
மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்துக் கிடப்பேன்
விக்கல் வாய்ப் பண்ணை ஆண்டையைக் கேட்டு என்னை மீட்டுக்கொள்ளடி முக்கூடல்பள்ளி
** மூத்தபள்ளி பண்ணைக்காரனிடம் செல்லுதல்
** கொச்சகக் கலிப்பா

#102
சத்தியமாய்ச் சொன்ன பள்ளன் சற்றும் மனம் கோணாமல்
புத்திசொல்லி உன் சிறை நான் போய் மீட்பேன் என்று எழுந்து
முத்தி தரும் மால் அழகர் முக்கூடல் மூத்தபள்ளி
அத் திசையில் நின்று பண்ணை ஆண்டவர் முன் சென்றாளே
** மூத்தபள்ளி பண்ணைக்காரனை வேண்டல்
** சிந்து
** இராகம் ஆனந்தபயிரவி தாளம் ஆதி

#103
ஐயா பராக்கு பராக்கு உம்மைக் கும்பிட்டேன் ஆண்டே உம்மை
அல்லவோ தேடி அடியாள் இங்கே வந்தேன் ஆண்டே
கையாரக் கண்ட களவும் பொறுப்பீரே ஆண்டே பள்ளன்
காவலைக் கண்ணாலே பார்க்கப்படாது காண் ஆண்டே

#104
தன்மத்துக்கு இந்தப் பிழையைப் பொறும் எங்கள் ஆண்டே முலை
சாய்ந்தால் வயிறு அல்லோ தாங்கவேணும் பண்ணை ஆண்டே
வன்மத்தைப் பார்த்தால் அவன் இலக்கு அல்லவே ஆண்டே தென்
மருதூரில் பள்ளியால் வந்த பொல்லாப்புக் காண் ஆண்டே

#105
ஆடிக் காலாவதி வெள்ளாமை நாள் ஆச்சே ஆண்டே பள்ளன்
அல்லாமலே பயிர் ஆர் இடுவார் பண்ணை ஆண்டே
தேடிடும் பள்ளுப் பிள்ளைக்கு இணை கண்டீர் ஆண்டே இனித்
தேவரீர் சித்தம் என் பாக்கியம் காண் பண்ணை ஆண்டே

#106
சட்டம் மேல் சட்டம் பிழைத்தாலும் பெண்பிள்ளை ஆண்டே பொல்லாத்
தண்ணீர் குடித்த வெறியால் முதல் சொன்னேன் ஆண்டே
கட்டளையிட்டபடி புத்தி கேட்பன் காண் ஆண்டே பள்ளன்
கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே
** பள்ளனை விடுவிக்க அவன் கணக்குச் சொல்லுதல்
** கொச்சகக் கலிப்பா

#107
மூத்தபள்ளி சொற்படியே முக்கூடல்பள்ளனைக் கால்
சேர்த்த மரமும் கழற்றிச் செய் வரிசை செய்ததன் பின்
காத்திருந்து பின்னும் அவன் கண்ணர் பண்ணை ஆண்டவர் முன்
வாய்த்த விதை வர்க்கமுடன் மாட்டு வகை சொன்னானே
** வித்து வகை
** சிந்து
** இராகம் மத்தியமாவதி தாளம் ஆதி

#108
சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா
முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா
கத்தூரிவாணன் காடைக்கழுத்தன் இரங்கல்மீட்டான் கல்லுண்டை பூம்பாளை பால்கடுக்கன் வெள்ளை
புத்தன் கருங்குறுவை புனுகுச்சம்பாவும் இரு பூவுக்கும் விதை சேரில் போட்டேன் ஆனாண்டே
** மாட்டு வகை
** சிந்து
** இராகம் கல்யாணி தாளம் ஆதி

#109
குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக்குளம்பன் மேழை
குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
மடப்புல்லைக் கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன்
மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன்
படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன்
பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன்
விடத்தலைப்பூநிறத்தான் வெள்ளைக்காளையும் இந்த
விதத்தில் உண்டு ஆயிரம்தான் மெய் காண் ஆண்டே
** ஏர்க்கால் வகை

#110
தயரத ராமரான தாமரைக்கண் அழகர்
தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில்
கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று
கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று
வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த
வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே
இயல்பாய்ப் பதனம்பண்ணி இருப்பது உண்டு அத்தனையும்
எண்ணி அறிய வல்லார் எவர் காண் ஆண்டே

#111
இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன்
எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து
கலங்கவே வந்த சிறைக் கருடனைக் கண்டு கட்டுக்
கழன்ற பாச வடக் கயிறு ஆயிரம்
குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும்
கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம்
மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன்
வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே
** முகூர்த்தம் பார்த்தல்
** கொச்சகக் கலிப்பா

#112
ஏரும் பல விதையும் ஏர்க்கால் முதலான
சீரும் அழகக் குடும்பன் செய்தி பெறச் சொல்லிய பின்
ஆரும் பரவும் அழகர் பண்ணையான் கேள்வி
கூரும் முகிழ்த்தம் குடும்பனுடன் சொன்னானே
** சிந்து
** இராகம் நாட்டை தாளம் ஆதி

#113
சத்தமி புதன் சோதி தைதுலக்கரணம்
தவறாத சுபயோகம் தகு பஞ்சாங்கம்
மெத்த நன்று எனப் பார்த்து மேலான வேதியர்கள்
மிக்க துலா முகிழ்த்தம் விதித்தார் இன்று
பத்தர் பணி முக்கூடல் பரமனார் அழகர்-தம்
பண்ணைக்கு ஏரிடவேணும் பள்ளா என்றே
உத்தாரம் பண்ணைக்காரன் உரைத்தான் உரையைக் கேட்ட
உடனே குடும்பன் ஏர் கொண்டு உழச் சென்றானே
** பள்ளர் நாளேருழுதல்

#114
சாத்தன் பெரியான் கொன்னைத்தாண்டி அரியான்
சடையான் உடையான் தட்டைச்சங்கன் புங்கன்
போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன்
பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன்
காத்தன் வெருகன் கப்புக்காலன் முருகன்
கண்டன் கருத்தமுண்டன் கங்கன் சிங்கன்
கூத்தன் முதலாய் உள்ள பள்ளர் எல்லாம்
குரவையிட்டு ஏரைப் பூட்டிக் கூடி உழுதார்
** பள்ளனை மாடு முட்டல்

#115
பூட்டும் காளையை விட்டுப் பூட்டாக் காளையைப்
பூட்டும் பொழுதில் ஒரு புல்லைக் காளை
மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி
முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட
மாட்டுக் குறும்பு அடங்க மறிப்பன் எனவே
வடிவழகக் குடும்பன் வந்து மறித்தான்
கோட்டு முனையால் அது குத்தும் அளவில்
குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான்
** பள்ளியர் வரவு
** கொச்சகக் கலிப்பா

#116
துள்ளி எழும் காளை தொடர்ந்து பள்ளனைப் பாய்ந்து
தள்ளிவிடும் சோர்வு கண்டு சற்றும் தரியாமல்
புள்ளின் கடைவாய் கிழித்த புங்கவனார் முக்கூடல்
பள்ளி வரத் தென்மருதூர்ப் பள்ளியும் வந்துற்றாளே
** மூத்தபள்ளி புலம்பல்
** சிந்து
** இராகம் கேதாரகௌளம் தாளம் ஆதி

#117
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு
மாட்டாமல் போனது என்ன சொல்லாய்
கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்தப் பலம்
கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய்
சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர்ச்
சக்களத்தி புலை மருந்தின் வெறியோ
முதலே ஈது ஆர் விளைத்த இடும்போ தெரிந்திலேன்
முக்கூடல் அழகர் பண்ணைக் குடும்பா
** இளைய பள்ளி புலம்பல்

#118
வடுப்படா மேனி வடுப்படுமோ நன்று நன்று என்
வல்லாளன் சமர்த்தும் போய்விடுமோ
தடுத்து நீ ஏன் மாட்டைத் தொடர்ந்தாய் முக்கூடல்
சதுரி பார்த்துச் சிரிக்கவோ கிடந்தாய்
அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல்
ஐயா பூலாவுடையார் குறையோ
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர்
பாதம் மறவாத பண்ணைக் குடும்பா
** பள்ளன் எழுந்து வேலைசெய்தல்
** கொச்சகக் கலிப்பா

#119
ஏங்கி இரு பள்ளியரும் இவ்வாறு இரங்கிநிற்கும்
தேங்குதலை வார்த்தை செவியில் புகுதலுமே
தாங்கு துயர் நீங்கித் தலை அசைத்துத் தோள் குலுக்கிப்
பாங்கினொடு முக்கூடல்பள்ளன் எழுந்தானே
** உழுது விதைத்தல்
** சிந்து
** இராகம் புன்னாகவராளி தாளம் அடதாளம்

#120
பள்ளன் எழுந்து நிலை தரித்தான் நின்ற பள்ளியர் முகம் பார்த்துச் சிரித்தான்
மெள்ளப் புருவம் கோட்டி நெரித்தான் மாட்டை மீளவும் பூட்டி உழத் தரித்தான்

#121
உழுத உழவைக் கண்டு களித்தான் பள்ளர் உள்ளபேரை எல்லாம் விளித்தான்
தொழுது தெய்வக்கடன் கழித்தான் அந்தத் தொளியில் விதைகள் எல்லாம் தெளித்தான்

#122
முளைக்குத் தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான்
வளைத்து வேலி சூழ நட்டான் நாற்று வளர்க்க நாளும் ஒருப்பட்டான்

#123
வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான்
அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையைப் போய் அந்தச் செய்தி விண்டான்
** கொச்சகக் கலிப்பா

#124
நாறும் துழாய் அழகர் நாட்டில் பழனம் எல்லாம்
ஏறும் பயிர் தரு நாற்று இன்று நடவேணும் என்றே
தேறும்படி அறிக்கைசெய்து பண்ணை ஆண்டவனார்
கூறும் பணி தலைமேல்கொண்டு பள்ளன் மீண்டானே
** நாற்றுப் பறித்தல்
** சிந்து
** இராகம் மோகனம் தாளம் அடதாளம்

#125
முந்தித் தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும்
முழுதும் உழுது திருந்தப் பரம்பு மூன்றும் தடவியே
அந்தத் தொளிக்குச் சமைந்த நாற்றை அடுத்த வயலில் பிடுங்கி வேறே
அடுக்கி முடிந்து வட்டவட்டங்களாய்க் குவித்த பின்
வந்தித்து அழகர் பதத்தைத் துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில்
வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்திக் கும்பிட்டே
பந்திப்படுத்தி நிரையை வகுத்துப் பரவை ஒலி போல் குரவை எழுப்பி
பயிர் நெருங்காமல் கலந்து போகாமல் பதியும் பள்ளீரே
** பள்ளியர் வகை

#126
சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி
திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள்
நன்னி உடைச்சி சடைச்சி மூக்கி நல்லி பூலி ஆலி வேலி
நாச்சி பேச்சி சுந்தி எழுவி நாகி போகிலாள்
பொன்னி அழகி நூவி சேவி பூவி சாத்தி காத்தி அம்மச்சி
பூமி காமி வேம்பி கரும்பி புலிச்சி அங்காளி
கன்னி பொதுவி அன்னம்பாலி கள்ளியும் கலந்து ஒருவர்க்கொருவர்
கைவிரசலாய் நடுகைச் சமர்த்தைக் காட்டும் பள்ளீரே
** நடுகை
** கொச்சகக் கலிப்பா

#127
தாற்றுக் கால் பூம் துளவத் தார் அழகர் முக்கூடல்
சேற்றுக் கால் மள்ளருக்குத் தென்றல் கால் என் ஆமோ
ஆற்றுக்காலாட்டிய உள் ஆட்டெழுங்கால் பண்ணை நடும்
நாற்றுக்கால் விட்டு நடுகைக் கால் ஏறாதே
** சிந்து
** இராகம் கல்யாணி தாளம் அடதாளம்

#128
படை கொண்டே வரும் கரனையும் பொரு விடையம் சேர் திரிசிரனையும்
பண்டு முடித்த கணையினார் குகன் கண்டுபிடித்த துணைவனார்
குடை குன்றாய்ப் பசுக் கிடை நின்றார் முக்கூடல் அழகர் வயலுள்ளே
கொண்டாடிக்கொண்டு நடச்செய்தே இன்று கண்டோம் இது என்ன புதுமையோ
தொடை என்றால் வாழைத்தண்டைப் போல் விழிக் கடை என்றால் கணை ரெண்டைப் போல்
சொருக்கு என்றால் மேக படத்தைப் போல் முலை நெருக்கு என்றால் இணைக் குடத்தைப் போல்
இடை என்றால் வஞ்சிக் கொடியைப் போல் வரும் நடை என்றால் இளம் பிடியைப் போல்
இருந்த சாயலுக்கு இப்பால் குருந்தி திருந்தினாள் அடி பள்ளீரே

#129
கடிக்கும் அரவில் நடிக்கும் இறைவர் கஞ்சனார்க்கு ஒரு நஞ்சு_அனார்
கடையும் அமுதம் உடையும் திரையில் காட்டி அண்டருக்கு ஊட்டினார்
அடிக்குள் அடங்கும்படிக்கு முதல்வர் அழகர் முக்கூடல் வயலுள்ளே
ஆடிப்பாடி நாற்று முடியை அலைத்துக் குலைத்து நடச்செய்தே
வடிக்கும் மதுவைக் குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும்
வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முகக் கோட்டமும்
துடிக்கும் இதழைக் கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும்
தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளீரே

#130
புங்கவர் தமிழ்ச் சங்கம் மருவும் புலமைத் தலைமை அழகனார்
பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே
தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும்
தாமதப்படவே மற்றது ஒன்றைச் சாட்டி மேட்டில் கூட்டமாய்
எங்கும் காப்பு ஒலி பொங்கவே அதற்கு எதிராய்ச் சங்கிலி அதிரவே
இலங்கும் முலைகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே
அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும்
அரியாளும் கட்டைப் பெரியாளும் கும்மியடிப்பதைப் பாரும் பள்ளீரே

#131
வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார்
வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல்
உள்ளூர்ப் பண்ணை வயலுளே தெற்கு வெள்ளூர்ப் பள்ளி வெயிலியும்
உளக்குடிப் பள்ளி உடைச்சியும் மேலக் களக்குடிப் பள்ளி சடைச்சியும்
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடிக் கூட்டமிடச்செய்தே
தையலி மகள் பொய்யலி கிட்டச் சாடிப் பெரியான் ஓடிப்போய்க்
கள்ளால் உற்றது மீறியே நிலைகொள்ளாமல் தடுமாறியே
காப்பைக் காட்டு என்று கையைப் பிடிக்கும் கோப்பைப் பாரும் பள்ளீரே

#132
சிறுகண் வேழம் உறு வெம் துயரம் தீர்த்து முன் நின்று காத்தவர்
திருமுக்கூடல் அழகர் பழைய திருவிளையாட்டுப் புரவிலே
குறுவை அறு தாளடியையும் பள்ளன் புரவி உழுத தடியையும்
குழம்பிப் பரம்பு தடவிக் காலிட்டு உழப்பிச் சம்பா நடச்செய்தே
மறுகிமறுகிச் சருவக் குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை
வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்துப் போய்த்
தறுகி அறுகம் கொடியிலே அடிதட்டி விழுந்தமட்டிலே
தலையைத் தாங்குறாப் போலே குத்து முலையைத் தாங்குறான் பள்ளீரே

#133
பத்துத் தலையும் அரக்கன் புயமும் தத்தக் கணை ஒன்று ஏவிய
பருவப் புயலின் உருவத்து அழகர் பண்ணைக் கண்ணாறு நடச்செய்தே
முத்தக் குடும்பன் பெற்ற பொத்தாணி மொண்டிச் சோரன் மாறனூர்
மூக்கி தமக்கை காக்கி கறுப்பி மூவிக்கு இளைய நூவி-தன்
குத்து முலையும் முத்து நகையும் குறிக்கிறான் அந்தச் சிறுக்கியும்
கூசிப்பார்க்கிறாள் அதுக்கு அவன் மெள்ளப் பேசிப்பார்க்கும் ஆசையால்
எத்தத் துணிந்து அதட்டிட்டு அவள் முன் ஏர்க்காலை விட்டு நோக்காலை
எடுக்கிறாப் போல கிட்டக்கிட்டப் போய் அடுக்கிறான் பாரும் பள்ளீரே

#134
செழும் திருப்பதம் தொழும் தவத்தினர் சித்தம் உருகி நித்தமும்
தேடி வரும் முக்கூடல் அழகர் சிற்றாற்றுக் கால் பற்றிலே
உழும் தொழில்படு பழந்தொளிப் புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே
ஒண்டி வயிற்றுப் பண்டிப் பானைத் தொண்டிக் கள்ளை மண்டியே
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவக் குடும்பன் மருமகன்
ஈச்சக் குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டித் தட்டியே
கொழுந்தி பக்கத்தில் விழுந்ததுக்கு அவள் கூடப்பிறந்த மாடன் போய்க்
கொண்டையைப் பிடித்து இழுக்கிறான் வம்புச்சண்டையைப் பாரும் பள்ளீரே
** பயிர் விளைவு
** கொச்சகக் கலிப்பா

#135
பாரின் அமுது உண்ணப் பசிக்கு அளிப்பார் நின்ற நிலை
பேரினும் மென்மேலும் பெருகுதற்குச் சாட்சி என்றே
காரின் உருவச் சுருதிக்காரணர் முக்கூடல் வயல்
சீரின் நடு நாற்று நடச் செய்யினில் நின்று ஓங்கியதே
** சிந்து
** இராகம் ஆனந்த பைரவி தாளம் ஆதி

#136
பதிந்த நடவு தேறிப் பசப்பும் ஏறிப் பசந்து குருத்து மேன்மேல் பரந்து செறிந்து
முதிர்ந்த தமிழிசைக்கு முடி அசைக்கும் முதல்வர் எனத் தழைத்து முதல் குழைந்தே
பொதிந்த பொதியை நீட்டிப் பூட்டிக் காட்டிப் புரப்போர் பொன் இணங்கு கை போல் வணங்கி
எதிர்ந்த கதிர் முளைத்தே இடை பழுத்து ஏற்ற விளைவு தோற்றம் தோற்றியதே
** அறுவடை

#137
முறுக விளைந்தவாறு முற்றும் தேற்ற முக்கூடல் பண்ணைக்காரன் முன்பு கூற
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி
உறு தெய்வநிலை போற்றி உரிமை சாற்றி ஓங்கு நாள் கதிர் செய்தார் உவகை செய்தார்
நிறுவி நிரை தெரிந்தார் நெருங்கி அரிந்தார் நிரப்பி அரிகள் எங்கும் பரப்பினாரே

#138
கடிதில் புரி முறுக்கிக் கதிர் கட்டி இறுக்கிக்
கட்டின கட்டு எடுப்பார் களத்தில் விடுப்பார்
நெடிதில் சுமை கொண்டு உய்ப்பார் நிலைப் போர் உயர்ப்பார்
நின்ற போரைப் பிரிப்பார் நிலத்தில் விரிப்பார்
படியில் பகடு அணைப்பார் பிணியில் பிணைப்பார்
பிணையல் விடத் தொடுப்பார் பேர்த்துக் கொடுப்பார்
பொடி வைக்கோலைத் தவிர்ப்பார் பொலியைக் குவிப்பார்
பொலி தூற்றி ஆற்றிப் பொலி பொலி என்று அளப்பார்

#139
தினச்சத்திரத்துக்கு என்றும் பெரியநம்பி
திருமாளிகைக்கு என்றும் சில நெல்லுக் கொடுப்பார்
சனக்கட்டளை ஏழு திருப்பதிக்கும்
தலத்தார் படிக்கும் சில சாலி அளப்பார்
மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன்
மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரிக் குவிப்பார்
கனக்கும் சிறப்பு அமையக் கட்டி அளப்பார்
கங்காணப்படி பண்ணைக்காரனார் முன்னே
** நெற்கணக்கு
** கொச்சகக் கலிப்பா

#140
வளம் தரு தென் முக்கூடல் மாயவனார் பண்ணையிலே
அளந்த பொலி இத்தனை என்று ஆதாயமும் செலவும்
களம்-தனிலே நின்று பண்ணைக்காரனுடனே குடும்பன்
உளம் தடுமாறாதவகை உள்ளபடி சொன்னானே
** சிந்து
** இராகம் பைரவி தாளம் ரூபகம்

#141
அளக்கும் பொலிக்கணக்கைப் பண்ணை ஆண்டே சொல்லக் கேளும் பள்ளர்
வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன்

#142
ஆடித் திருநாளுக்கு நெல் ஆறாயிரம் கோட்டை நெட்டைத்
தாடிப் பிச்சன் வகையில் நேரும் சம்பாநெல் அளந்தேன்

#143
வரு பங்குனித் திருநாள் படி வகைக்கு ஆயிரம் கோட்டை சின்னத்
திருவன் பயிரிடும் புள்ளியில் செந்தாழை நெல் அளந்தேன்

#144
சிற்றாற்று அணைக்கல்லுக் கட்டச் செலவு ஆயிரம் கோட்டை பண்ணைப்
பெற்றாக் குடும்பன் புள்ளியில் கண்ட பெருவெள்ளை நெல் அளந்தேன்

#145
மண்டகப்படிச் சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை
முண்டன் நெல் வகை-தனிலே கண்ட முத்துவெள்ளை நெல் அளந்தேன்

#146
நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை
மூவான் முதல் இட்டமலை முண்டன் நெல் அளந்தேன்

#147
இது அன்றியும் தினப் பூசை நெல் எண்ணாயிரம் கோட்டை மொண்டிப்
பொதுவன் புதுத் திருத்தில் கண்ட பூம்பாளை நெல் அளந்தேன்

#148
முற்றும் கணக்கு என்னால் சொல்ல முடியாது என்பது அறிவீர் சேரில்
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே
** மூத்தபள்ளி முறையீடு
** கொச்சகக் கலிப்பா

#149
எல்லாக் கணக்கு உரைத்தும் என் பேரும் என் கணக்கும்
சொல்லாது விட்ட பள்ளன் சூதை இனிக் கேளும் என்றே
வில்லாளர் முக்கூடல் மிக்க பள்ளி தன் பொருமல்
நில்லாமல் பள்ளியர் முன் நிட்டூரம் சொன்னாளே
** சிந்து
** இராகம் கல்யாணி தாளம் ஆதி

#150
முட்டிக்கால் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ ஆந்தை
மூக்கு மூஞ்சிப் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ
மட்டி வாய்ப் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ கரு
மந்தி முகப் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ
சட்டித் தலைப் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ தண்ணீர்ச்
சால் வயிற்றுப் பண்ணை ஆண்டே நடுக் கேளாரோ
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த
கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே

#151
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும்
பற்று விட்டதில்லைப் பாடுபட்டும் அறியான்
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள்
பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான்
உள்ள பேர் எனக்குத் தரக் கை எழும்பாமல் காலால்
உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான்
தள்ளுமண்ணும் கல்லும் சற்றே நெல்லும் கலந்தே பங்கு
தந்தோம் என்று எனக்கு இம்மட்டும் தந்தான் பள்ளீரே
** பள்ளியர் ஏசல்
** சிந்து
** இளைய பள்ளி

#152
முண்டை முறையிட்டது என்ன முக்கூடல்பள்ளி உங்கள்
மூப்புச்சொம் எனக்குத் தந்தால் மூதலியடி
தொண்டைகட்டக் கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது
சொன்ன பேச்சைப் பண்ணையார்க்குச் சொல்லுவேனடி
** மூத்தபள்ளி

#153
சொன்னால் எனக்கு என்ன பயம் மருதூர்ப்பள்ளி சென்று
சொல்லில் உன் காசு செல்லாது சொல்லடி போடி
** இளைய பள்ளி
என்னாலே ஆகாதது உண்டோ முக்கூடல்பள்ளி பள்ளன்
இங்கு வந்தால் உன் சலுகை எல்லாம் தெரியும்
** மூத்தபள்ளி

#154
சலுகை இல்லாமல் என்ன மருதூர்ப்பள்ளி நானும்
தன் ஊர் விட்டு உன் போல ஒட்டுச்சாய்ப்பில் வந்தேனோ
** இளைய பள்ளி
வலுச்சலுகை பேசாதே நீ முக்கூடல்பள்ளி உன் போல்
வழக்கிட்டுக் கணக்கிட்டு வந்தேனோ போடி
** மூத்தபள்ளி

#155
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன்
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான்
** இளைய பள்ளி
உழக்கில் கிழக்குமேற்கோ முக்கூடல்பள்ளி மறித்து
உன்னைக் கொண்டான் என்னைக் கண்டு என் ஊரிலே வந்தான்
** மூத்தபள்ளி

#156
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார்
ஆமக்களைத் தொடர்ந்து உனைப் போல் ஆரடி வந்தாள்
** இளைய பள்ளி
எங்கே வந்தாலும் என்ன முக்கூடல்பள்ளி வீட்டில்
எய்தில் காட்டு நாவி பூனைக்கு இணையாமோடி
** மூத்தபள்ளி

#157
நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி
நானடி பூனை மூளி நாயும் நீயடி
** இளைய பள்ளி
வீவியாட்டம் ஆடவேண்டாம் முக்கூடல்பள்ளி பேச்சில்
மிஞ்சிப் பேசில் நெஞ்சு அறுப்பேன் அஞ்சிப் பேசடி
** மூத்தபள்ளி

#158
அஞ்சச் சொன்னது என்னை என்ன மருதூர்ப்பள்ளி உனக்கு
ஆசைப்பட்ட குடும்பனை அஞ்சச் சொல்லடி
** இளைய பள்ளி
கொஞ்சக்காரிக்கு அஞ்சுவேனோ முக்கூடல்பள்ளி இன்னும்
குட்டையில் போடு உனக்கு அவன் கும்பிட்டு அஞ்சுவான்
** மூத்தபள்ளி

#159
குட்டை-தனில் போட்டதற்கோ மருதூர்ப்பள்ளி அந்தக்
குடும்பனைப் பிணைப்பட்டுக் கொண்டு மீட்டாய்
** இளைய பள்ளி
சட்டைபண்ணாது ஏசிக்காட்டு முக்கூடல்பள்ளி குட்டை
சாத்துவாய் கழற்றுவாய் உன் தந்திரமடி
** மூத்தபள்ளி

#160
மந்திரமும் தந்திரமும் மருதூர்ப்பள்ளி உன் போல்
வகை வந்தால் பள்ளனும் என் வசம் ஆகானோ
** இளைய பள்ளி
சந்தியில் மாங்கொட்டை போடி முக்கூடல்பள்ளி நீயும்
சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய்

#161
** மூத்தபள்ளி
சாதிப்பது உனக்கு வரும் மருதூர்ப்பள்ளி நரிதான்
பரியாய்ச் சாதித்தான் உங்கள் சம்பு அல்லோடி
** இளைய பள்ளி
பேதிக்கச் சாதிக்க வாராய் முக்கூடல்பள்ளி கல்லைப்
பெண்ணாகச் சாதித்தான் உங்கள் கண்ணன் அல்லோடி
** மூத்தபள்ளி

#162
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில்
மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி
** இளைய பள்ளி
கொங்கை-தனில் நாச்சியாரைச் சங்கை இல்லாமல் பண்டு
கூடி நெய்யில் கையிட்டானும் கொண்டல் அல்லோடி
** மூத்தபள்ளி

#163
காமனை மருகன் என்று எண்ணிப்பாராமல் காய்ந்து
கண்ணில் ஏறுபட்டான் உங்கள் கர்த்தன் அல்லோடி
** இளைய பள்ளி
மாமன் என்று பாராமல் முன் கஞ்சனைக் கொன்றே கண்கள்
மாறாதே பூப்பட்டான் உங்கள் மாயன் அல்லோடி
** மூத்தபள்ளி

#164
மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டுப் பொன்னின் மயமாம் பனி
மலை ஏறிப் போனான் உங்கள் மத்தன் அல்லோடி
** இளைய பள்ளி
காதலித்துத் தம்பியுடன் சீதை பொருட்டால் அன்று
கடல் ஏறிப் போனான் உங்கள் கண்ணன் அல்லோடி
** மூத்தபள்ளி

#165
தான் பசுப் போல் நின்று கன்றைத் தேர்க்காலில் விட்டே சோழன்-
தன் மகனைக் கொன்றான் உங்கள் தாணு அல்லோடி
** இளைய பள்ளி
வான் பழிக்கு உளாய்த் தவசி போல மறைந்தே நின்று
வாலியைக் கொன்றான் உங்கள் மாயன் அல்லோடி
** மூத்தபள்ளி

#166
வலிய வழக்குப் பேசிச் சுந்தரன் வாயால் அன்று
வையக் கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி
** இளைய பள்ளி
புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை
போல நின்றான் உங்கள் நெடு நீலன் அல்லோடி
** மூத்தபள்ளி

#167
அடியனும் நாயனுமாய்க் கோவில் புறகே தொண்டன்
அன்று தள்ளப் போனான் உங்கள் ஆதி அல்லோடி
** இளைய பள்ளி
முடியும் சூடாமலே கைகேசி தள்ளவே காட்டில்
முன்பு தள்ளிப் போனான் உங்கள் மூர்த்தி அல்லோடி
** மூத்தபள்ளி

#168
சுற்றிக் கட்ட நாலு முழம் துண்டும் இல்லாமல் புலித்
தோலை உடுத்தான் உங்கள் சோதி அல்லோடி
** இளைய பள்ளி
கற்றைச் சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு
கட்டிக்கொண்டான் உங்கள் சங்குக்கையன் அல்லோடி
** மூத்தபள்ளி

#169
நாட்டுக்குள் இரந்தும் பசிக்கு ஆற்றமாட்டாமல் வாரி
நஞ்சை எல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி
** இளைய பள்ளி
மாட்டுப் பிறகே திரிந்தும் சோற்றுக்கு இல்லாமல் வெறும்
மண்ணை உண்டான் உங்கள் முகில்வண்ணன் அல்லோடி
** மூத்தபள்ளி

#170
ஏற ஒரு வாகனமும் இல்லாமையினால் மாட்டில்
ஏறியே திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி
** இளைய பள்ளி
வீறு சொன்னது என்ன மாடுதானும் இல்லாமல் பட்சி
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதன் அல்லோடி
** மூத்தபள்ளி

#171
பெருமாள் அடியானுக்குப் பெண்டு இருந்துமே எங்கள்
பெருமாளை நீ பழித்துப் பேசலாமோடி
** இளைய பள்ளி
திருமால் அடிமை என்றாய் சாலப் பசித்தால் ஆரும்
தின்னாதது உண்டோ சினத்தால் சொல்லாதது உண்டோ
** மூத்தபள்ளி

#172
தீராண்மை நன்றாகச் சொன்னாய் மருதூர்ப்பள்ளி போ போ
சினத்தாலும் சீரழியச் சொல்லலாமோடி
** இளைய பள்ளி
வாராதோ எனக்குக் கோபம் முக்கூடல்பள்ளி முந்த
வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ

#173
** மூத்தபள்ளி
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே
மூப்பு இளமை பார்த்துத் தலைசாய்ப்பார் இல்லையோ
** இளைய பள்ளி
இந்த வார்த்தை முந்தச் சொன்னால் முக்கூடல்பள்ளி சண்டை
இத்தனை உண்டோ எனக்குப் புத்தி இல்லையோ

#174
** பள்ளியர் சமாதானமாதல்
சொன்னால் என்ன நீயும் பொறு நானும் பொறுத்தேன் கிளை
சூழ்ந்திருக்க நாமே கூடி வாழ்ந்திருக்கலாம்
பன்னகத்தில் ஆடிய முக்கூடல் அழகர் திருப்
பாத மலர் வாழ்த்தி ஆடிப்பாடுவோமே
** வாழ்த்து
** கொச்சகக் கலிப்பா

#175
வீழி இதழ்ச் செங்கமலம் மேவும் அனை வாழி நெடும்
சூழி முக வேழம் அன்று சொன்ன திருப்பேர் வாழி
ஆழி அருளாளர் அழகர் திருத்தாள் வாழி
வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே
**